பொருத்தமான வேலையில் சேருவது எப்படி?

 

நாம் நேர்காணலை (Interview) சந்திக்கும் போது முக்கியமான கேள்வி அனைவரிடமும் கேட்கப்படுகிறது. அவை, இந்த வேலைக்கு நீங்கள் பொறுத்தமானவரா? ஏன் இந்த வேலையை தேர்ந்தெடுக்க காரணம்? நாங்கள் ஏன் உங்களை பணியமர்த்த வேண்டும்? இது போன்ற கேள்விகள் நேர்காணலின் போது நிச்சயம் சந்திக்க நேரிடும் என்று முன் கூட்டியே அறிந்து வைத்திருப்போம். மேலும், இது போன்ற கேள்விகளுக்கு இரண்டு அல்லது மூன்று வரிகளில் பதிலளித்து அடுத்த கேள்விக்கு நகர்ந்திடுவோம். ஆனால், உண்மையில் கேட்கப்படும் கேள்வியை சற்று உற்று நோக்கி பார்த்தால் தான், நாம் எந்தளவிற்கு ஒரு வேலைக்கும், நமது தகுதிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என தெரிய வரும். அதனால், மறுபடியும் அதே கேள்வியை மற்றொரு முறை சந்திப்போம் மற்றும் அதற்கான விளக்கமான விடையையும் அறிந்திடுவோம்.

வேலை

நீங்கள் இவ்வேலைக்கு பொருத்தமானவரா?

எந்த ஆடை அணிந்தால் பொருத்தமாக (Fit) இருக்கும் என நாம் பலரிடம் கேட்டு அணிந்திருப்போம். ஆனால் எந்த வேலை எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று பிறரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ள முடியாது. அது அவரவர் எடுக்க வேண்டிய முடிவு. இருந்தாலுமே, பல தகுதிகள் உடையவர்கள் இப்படிப்பட்ட வேலைகளை தேர்ந்தெடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று பொதுவாக சொல்லும் கருத்தினை பரிசீலனை செய்து பார்த்திடலாம். பொருத்தமான வேலை என்பது உருவத்திற்கேற்ற வேலையை தேர்ந்தெடுப்பது அல்ல, அது விருப்பத்திற்க்கு ஏற்றது. இதனை சரியாக அறிந்து வைத்திருப்பவர்கள் உயர்கல்வி தேர்ந்தெடுக்கும்போதே தெளிவாக இருப்பார்கள். இந்த விஷயத்தில் குழப்பம் உள்ளவர்களை பார்த்தாலே தெரியும். இவர்கள் படித்த படிப்பு ஒன்றாகவும், செய்யும் வேலை ஒன்றாகவும் இருக்கும். இந்த கட்டுரை முடிவிற்குள் நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை உங்களுக்கு பொருத்தமான ஒன்றாக உள்ளதா என்பது தெரிந்து விடும்.

கண்டுபிடி :

பள்ளி பருவத்தை கடந்தவுடனும் தன்னுடைய திறமை எது என்று கண்டுப்பிடிக்காவிட்டால் கல்லூரி முடிவிற்குளாவது திறமையை அடையாளம் காண வேண்டும். இது நிர்பந்தம் இல்லை. உலகில் இருக்கும் ஒவ்வொரு வரும் திறமையுள்ளவர்களாக தான் இருக்கிறார்கள். ஒரு சில திறமைகள் அடையாளம் காணப்படுவதால் வெளிவருகிறது. ஒரு சில நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானத்தை கொடுக்க முன் வந்தாலும், அந்த வேலையை முழு மனதுடன் செய்து முடிக்க முடியாமல் போகிறது. அதனால் பிடித்த வேலை எது என்றும், எந்த வேலையில் முழு மனதுடன் ஈடுபட முடியும் என்பதையும் கண்டுப்பிடிக்க வேண்டும்.

தேர்ந்தெடு :

பள்ளிப்பருவம் முடிந்தவுடனே தேர்ந்தெடுக்கும் முக்கிய பொறுப்பை சந்திக்க நேரிடுகிறது. அது அடுத்தது என்ன படிக்கலாம் அல்லது எங்கு படிக்கலாம் என்பதை பற்றியும் அல்லது எந்த வேலையில் சேரலாம் என்பதாகவும் இருக்கிறது. பொதுவாக இது போல முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது ஏற்கனவே இதுபற்றிய அனுபவம் கொண்ட, சிறந்த ஆலோசனை வழங்கும் மின்ட்லி வலைப்பக்கத்தில் சென்று அறிந்திடலாம். பல வேலைவாய்ப்பு மற்றும் அதன் தகவல்களை அளிக்கும் கட்டுரைகள் வாழ்க்கை வழிகாட்டி மீதான சுய அறிவை வளர்க்கும்.

நிலைத்திடு :

தகுதிக்கு ஏற்ப வேலைகளை தேர்வு செய்யும் போது, வேலை வழங்கும் நிறுவனம் எத்தனை காலம் வரை இருக்கும் மற்றும் நிரந்தர வேலையை கொடுக்கும் நிறுவனம் எது ? போன்ற பல கேள்விகளை ஆராய்ந்து அதன்பின்னர் வேலையில் சேருவது எதிர்கால பயத்தினை தவிர்க்கும். அதனால் தேர்வு செய்து அதில் நிலைத்திருக்க முற்பட வேண்டும்.

  • கண்டுபிடி
  • தேர்ந்தெடு
  • நிலைத்திடு – இந்த மூன்றை மனதில் கொள்ளுங்கள்.

வேலை

பகுப்பாய்வு செய்தல் :

ஒரு நிறுவனம் நபர்களை பணியமர்த்த எத்தனை சுற்றுக்களை கடந்து பணியமர்த்துகிறதோ அதேபோல ஒரு நிறுவனத்திற்காக தன் முழு நேரத்தை செலவிட செல்லும் நபர்களும் பலவற்றை பகுத்து ஆராய வேண்டும். வேலைக்கு சென்றால் வருமானம் கிடைக்கும். அத்துடன் முடிந்து விடக்கூடியதாக இருக்க கூடாது. இன்றும் பல முன்னணி நிறுவனங்கள் பல பணியாளர்களை ஒரு சில காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்து கொண்டுதான் வருகிறது. வேலை என்றாலே வருமானம் ஈட்டுவதோடு முடிந்துவிடாமல் அதனுடன் தனி திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தை அறிந்துக்கொள் :

ஒவ்வொரு நிறுவனத்திற்கென்று ஒரு சில வரைமுறைகள் உண்டு. ஒரு சில நிறுவனங்கள் திட்டமிட்டப்படி அவர்களின் இலக்கை அடையக் கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு சில நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் சீரான வளர்ச்சியை தொட்டு இருக்கும். இது போன்ற நிறுவனங்களை அடையாளம் கண்டு, அதில் தனது எதிர்காலம் எவ்வாறாக இருக்கும் என்பதை பகுப்பாய்வு செய்து அந்நிறுவனத்தில் பணி செய்ய முற்படுவது ஒவ்வொருவருக்கும் பொருத்தமாக இருக்கும்.

வேலை

நிறுவனத்துடன் தொடர்பு :

நிறுவன அமைப்பில் தெளிவான புரிதல் இருப்பது அவசியம். வேலை செய்யும் போது எதற்காக இப்பணியை செய்கிறோம், யாரிடம் இப்பணியை ஒப்படைக்க வேண்டும் மற்றும் வேலை நிமித்தம் யாரை அணுக வேண்டும் என்பதனை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பணிக்கு அமர்த்தும் போதே தொடர்பு கொள்ளும் திறன் உள்ளவர்களை பரிசோதித்து தான் தேர்வு செய்கிறார்கள். அதனால் பிரச்சினைக்கான தீர்வை சந்திக்க தயாராக இருப்பர் பணிக்கு பொருத்தமான நபராக இருப்பர்.  ஆகையால் இத்தகைய சூழலை உடைய பணியை தேர்ந்தெடுப்பது நல்லது.

பணி சூழல் :

பணி சூழல் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது. சேவை துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற நிறுவனத்தின் பணி சூழல் பிற நிறுவனங்களைக் காட்டிலும் வேறுபட்டு இருக்கும். கடினமான சூழ்நிலையில் பணியாளர்களை எந்தளவிற்கு உற்சாகப்படுத்தி வேலை துரிதப்படுத்த வேண்டும் என்ற நுணுக்கம் நன்கு அறிந்த நிறுவனமாக இருக்கும். இவர்கள் அவ்வப்போது பணியாளர்களை உற்சாகப்படுத்த கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, பணி சூழலை இலகுவாக மாற்றிவிடுவார்கள். இவ்விடத்தில் கூடுதல் வருமானத்திற்காக நீண்ட நேரம் பணியை செய்திட்டாலும் சோர்வு ஏற்படுவதில்லை. இது போன்ற ஊழியர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் நிறுவனம் எது தனக்கு பொருந்தும் என்பதை ஆராய வேண்டும்.

விவரத்தை சரிபார் :

காலிப்பணியிடம் என்ற அறிக்கை வந்தவுடனோ அல்லது கவரும் வகையில் அதிக வருமானம் விளம்பர பதிவை பார்த்தவுடனும் நேரடியாக நேர்காணலை அணுகுவது தவறானது. வேலைக்கான இலவச பதிவுகள் செய்தித் தாள்கள் முதல் கொண்டு சமூக வலைதளம் வரை வருகிறது. இந்த பதிவின் காலம் எப்பொழுது நிறைவு அடைகிறது மற்றும் வேலையின் முழு விவரங்கள் என்ன என்பது இத்தளங்களில் தெளிவாக கிடைப்பதில்லை. அதனால், வேலைப் பற்றிய முழு விவரங்கள் பதிவிடப்படும் வலைதளங்களில் அணுகி தகுந்த வேலையில் விண்ணப்பம் செய்திடலாம். அதில், முழு விவரங்கள் தரும் பதிவினை முதலில் கவனிக்க வேண்டும். அதில் பணி விவரமான கல்வி தகுதி, அனுபவம், இடம், பணி நேரம், வருமானம் மற்றும் திறமை‌ ஆகிய அனைத்தும் தனக்கு ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

வேலை

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு பகுதியையும் உற்று நோக்கி சுய மதிப்பீடு செய்தாலே சிறந்த வேலையில் சேருவதோடு அதிக வருமானத்தையும், பணி நிரந்தரத்தையும் அடைந்திடலாம். வேலை அளிப்பவர்கள் எத்தகைய வழிமுறைகளை கொண்டுள்ளார்களோ அதனை விட அந்த வேலையை பெற நாமும் இது போன்ற வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். அவை, விருப்ப வேலை எவை என்பதனை கண்டுப்பிடிக்க வேண்டும், சரியான வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும், குறிப்பிட்ட வேலையில் நிலைத்திருக்க வேண்டும் அதன் பின்னர், நிறுவனத்தையும், முதலாளியையும் (Employer) பகுப்பாய்வு செய்து அவர்கள் செய்யும் வேலை எந்த அளவிற்கு தன்னுடைய எதிர்காலத்தை வளர்க்கும் என்பதை பார்த்திட வேண்டும். மேலும் இது போன்ற பல ஆய்வுகளைச் செய்வதன் மூலம், தவறான வேலையில் சேர்ந்து நேரத்தை வீணாகும் காலம் தவிர்க்கப்படுகிறது.

வேலையைப் பற்றி அறிவது எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு வேலை செய்யும் உன்னை அறிந்து அதற்கேற்ப தகுதிப்படுத்துவது அதைவிட முக்கியமானது. 

Language