இந்தியாவுக்கு திரும்புவதற்கான 5 காரணங்கள்

இந்தியாவுக்கு திரும்புவதற்கான 5 காரணங்கள்

இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு, நாட்டையும் தாண்டி அது ஒரு அன்பால் மட்டுமே நிறைந்த வீடு. இங்கு பல மொழி, பல நிறம், பல சாதி, பல மதங்கள் என வேறுபட்டு இருந்தாலும், அதை அனைத்தையும் தாண்டி மக்கள் இந்தியர் என்ற உள்ளுணர்வில் அனைவரும் சகிப்புத் தன்மையுடன் ஒண்றிணைந்து வாழ்கின்றனர்.

இந்தியாவில் எல்லாமே சாத்தியம்! இந்தியா அபூர்வமானது, அது பசுமையானது, அது உண்மையானது.

இந்தியாவுக்குத் திரும்புவதற்கான காரணங்களைச் சுருக்கமாக சொல்ல இயலாது, அதனால் இந்த மக்கள் நாட்டினை விரும்புவதற்கான சிறந்த 5 காரணங்களை பார்ப்போம்.

1. பண்டிகைகளின் இல்லம்:

திருவிழாக்கள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றன, ஆனால் இந்தியாவில் திருவிழாக்கள் என்பது கற்பனையினைத் தாண்டி அது மகிழ்ச்சி கொள்வதற்கான இடமாக உள்ளது.

மதங்களைத் தாண்டி அனைத்து பண்டிகைகளையும் அனைவரும் கொண்டாடுகின்றனர். மற்ற நாடுகளில் வருடங்களுக்கு ஓரிருமுறை பண்டிகை இருக்கலாம். ஆனால் இந்தியாவின் மாதக் காலண்டரை எடுத்துப் பார்த்தால் தெரியும் பண்டிகை இல்லாத நாட்கள் மிகக் குறைவு என்று.

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், கணேஷ் சதுர்த்தி, துர்கா பூஜை, ஓணம், நவ ராத்திரி, ஆயுத பூஜை, சிவ ராத்திரி என சொல்லிக் கொண்டே போகலாம்.

பண்டிகையினை வெறும் பண்டிகையாக இல்லாமல், உறவினர்கள் ஒன்றுகூடி உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு நிகழ்வாக இருக்கும்.

2.  கண் கவர் அழகும் &  ஆரோக்கியமான உணவும்:

இந்தியா அழகிய மற்றும் இயற்கை அழகுகளைக் கொண்ட நாடு. இயற்கையின் மத்தியில் வாழ்வது என்பது ஒரு அமைதியான விஷயம், இந்த அமைதியினை பல பெருநகரங்களில் நீங்கள் காணமுடியாது.

சம்பாதிப்பதில் உங்களுக்கு உதவுவதைத் தவிர, இயற்கை வளங்களுக்கு நடுவே உங்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கும்.

தாஜ்மஹால், அமிர்தசரஸ் தங்கக் கோபுரம், ரெட் ஃபோர்ட்,  இந்தியா கேட், ஏராளமான ஆறுகளும் நீர்வீழ்ச்சிகளும், வாசனைமிக்க அழகிய மலர்கள், பச்சைப் பசேலென வயல்களில் விவசாயம், ஆரோக்கியமான சூரிய உதயம், பன்முகத்தன்மை கொண்ட மாநிலங்கள் என்று இந்தியாவின் அழகை சொல்லிக் கொண்டே போகலாம்.  

உணவினைப் பொறுத்தவரையில் வெளிநாடுகளில் இருப்பதுபோன்று பீசா, பர்கர் போன்ற அனைத்தையும் தாண்டி காலையில் இட்லி, சாம்பார், தக்காளி சட்னி, வெங்காய சட்னி என்று ஒரு விருந்தே இருக்கும். காலை நேர உணவுதான் இப்படி என்றால் மதியவேளை அதனை தோற்கடித்துவிடும்.

இந்தியாவுக்கு திரும்புவதற்கான 5 காரணங்கள்

ஆமாங்க, நம்ம ஊர்ல மாதிரி சாதம், சாம்பார், ரசம், ஒரு பொரியல், ஒரு கூட்டு, தயிர், ஊறுகாய் என இத்தனை வகைகளை வைத்து வேறு எங்கும் சாப்பிட முடியாதல்லவா? இது உணவல்ல 21 ஆம் நூற்றாண்டிலும் கிடைக்கும் தேவாமிர்தம்.

இரவு வேளை மீண்டும் தோசை, சாம்பார், தக்காளி சட்னி என இருக்கும். ஒவ்வொரு நாளும் கல்யாண வீட்டு விருந்துபோல் அனைத்தும் இந்தியாவில் கிடைக்கும். இதனைத் தாண்டி அருகிலேயே அப்பாவியாய் அமர்ந்து உணவு பரிமாறும் அம்மாவும் இங்கேதானே உள்ளார். அதனால் இந்தியா திரும்ப வேண்டும்.

3. இந்தியா ஒரு தாய்வீடு:

இந்தியாவில் வசிப்பது வீடு போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது. நாம் செல்லும் வெளிநாடுகள் நம்முடைய புகுந்த வீடு, நம் தாய் மண்ணான இந்தியாவோ நம் தாய் வீடு. யாருக்கும் தாய் வீடு கசக்காது அல்லவா? எவ்வளவு வளமை இருந்தாலும் தாய் மடி மன நிம்மதியையும், மன மகிழ்ச்சியையும் அள்ளிக் கொடுக்கும்.

 பாசத்தின் உணர்வை இந்தியாவில் மட்டுமே அதிகமாக உணர முடியும். பார்ப்பதற்கு மேலை நாடுகள் பளிங்குக் கல் போல் இருக்கலாம். வைரத்தினை எடுத்து உண்ண முடியாதல்லவா? பார்க்கலாம், ரசிக்கலாம், ஆனால் உறவு கொண்டாட முடியாது. உரிமை கொண்டாட முடியாது. உரிமையே இல்லையெனில் உறவின் பலம் எப்படி இருக்கும்?

இந்தியாவுக்கு திரும்புவதற்கான 5 காரணங்கள்

4. வாழ்க்கை முறை:

 பண்டிகைகளின் போது குடும்பங்கள், நண்பர்கள் ஒன்றாக இல்லாதபோது, ​​இந்தியாவினை நினைத்து இதயம் வலிக்கிறது, நீங்கள் இங்கே சொர்க்கத்தை உணருவீர்கள்.

இன்னும் மக்கள் உணர்ச்சிகளால் இணைக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு கூட்டு குடும்பத்தில் வாழ விரும்புகிறார்கள். தந்தை மீதான பயம், தாயின் மீதான பாசம், தாத்தா- பாட்டிகளின் கதைகள், உடன் பிறந்தோர் உறவுமுறை, அண்டைவீட்டுக்காரர் உடனான உறவு என அனைத்துமே இந்தியாவில் வேறு மாதிரியான வரங்கள்.

ஒரு பெரிய அளவிலான சகிப்புத் தன்மையினை மக்களிடத்து காண முடியும். வேறு நாட்டினருக்கும், வேறு மதத்தவருக்கும், வேறு இனத்தவருக்கும் அதே உரிமையினைக் கொடுத்து தன் வீட்டு பிள்ளையாய் கொண்டாடும் இந்தியா, தன் பிள்ளையை கொண்டாடாமல் விட்டு விடுமா?

5. கரம் கொடுக்கும் வாய்ப்புகள்:

இந்தியாவில் என்.ஆர்.ஐ.களுக்கு போதுமான வாய்ப்புகள் இல்லை என்று சொல்பவர்கள், மனதளவில் மூடர்களாக இருப்பவர்கள் ஆவர். அம்பானி, லக்ஷ்மி மிட்டல், சுந்தர் பிச்சை போன்ற புகழ்பெற்றவர்கள் இந்தியர்களே ஆவர்.

வெளிநாட்டில் பணிபுரிந்து உங்கள் வங்கி இருப்பு காலி ஆகிவிட்டதா? உங்களுக்கான மறுவாழ்வினை இந்தியா வழங்க உதவிக்கரம் நீட்ட தயக்கம் கொள்ளாது.

 இந்தியாவில் மிக எளிதில் ஒரு தொழில்முனைவோராக முடியும் அதனால்தான் நீங்கள் இந்தியா திரும்ப வேண்டும்.

இங்கு தொழில்நுட்ப வசதிகொண்ட பெருநகரங்களும் உண்டு, உணர்வினை அள்ளிக் கொடுக்கும் கிராமங்களும் உண்டு. முடிவு உங்கள் கையில்!!!