இணையதள சேவை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. அதிலும், இந்தியா மக்கள் அடர்த்தி மிகுந்த நாடாக இருப்பதால் இணையதள சேவை நிறுவனங்கள் இங்கு தங்களுடைய கவனத்தை அதிகமாக செலுத்தி பயனாளர்களை ஈர்த்து வருகின்றன. பல ஆண்டு காலமாக இணையதளத்தில் ஆங்கில மொழியை கொண்டு தான் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிந்தது. அதனால், ஒரு குறிப்பிட்ட சமூகமே அதனுடைய சேவையை பெற்று வந்த நிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிராந்திய மொழி  உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

 

இணையத்தில் ஆங்கில ஆதிக்கம் சரிகிறது! :

பிராந்திய மொழி உள்ளடக்க மூலமாக பெறப்படும் தகவல்கள் கிடைக்காததால் தொழில் நுட்பத்தின் மீது ஏற்படும் ஆர்வம் படிப்பறிவு அற்றவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் பயனளிக்காமல் இருந்தது. மக்களிடம் ஒரு விஷயத்தின் மீதான விழிப்புணர்வைக் கொண்டு செல்ல, தற்கால தொழில் நுட்பம் அதிக பங்காற்றினாலும், வெளியிடப்படும் செய்திகள் மக்களிடம் முழுமையாக சென்றடைவதில்லை. அவை அன்றாட நிகழ்வுகள் பற்றிய செய்திகளாக இருந்தாலும், அரசாங்க முக்கிய அறிவிப்புகளாக இருந்தாலும், புதியதாக சந்தைக்கு வரும் பொருட்கள் என்றாலும் அதன் அம்சங்கள் முழுவதும் ஆங்கில மொழிகளைக் கொண்டிருப்பதால், ஆங்கில மொழி அறியாதவர்களால் சுலபமாக தங்களுக்கு தேவையானது எது என அடையாளம் கொள்ள முடியாமல் போகிறது.

இதனை தவிர்க்கவே, முகநூல் போன்ற சமூக வலையமைப்பு நிறுவனத்தின் மூலம், பயனாளர்களின் தேவை உணர்ந்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பிராந்திய மொழியில் (அதாவது அவரவர் பேச்சு வழக்கு உள்ள மொழியில்) சேவையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வெகு நாட்களாக எழும்பியது. இதனைக் கவனித்த சமூக வலைத்தளங்கள் பிராந்திய மொழியின் கீழ் மெல்ல மெல்ல பகிர்வுகளை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, எதிர்பாராத அளவிற்கு பயனீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்தியாவில் பிராந்திய மொழிக்கான முக்கியத்துவத்தை உணர்ந்த கூகுள் போன்ற தேடுதல் முன்னணி  நிறுவனங்கள், தங்களுடைய செயல்பாட்டை அனைத்து பயனாளர்களிடம் சென்றடையும் வண்ணம் சற்று மாற்றியமைத்து பிராந்திய மொழியில் குரல் வழியாக தகவல்களை தேடல் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் பயன்பாட்டை உணர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிராந்திய மொழி உள்ளடக்கத்தில் செய்திகள், விளம்பரங்கள், பொழுதுபோக்குகள், வேலை வாய்ப்பு மற்றும் சந்தை நிலவரங்கள், உரையாடல்கள், கல்வி மற்றும் கலை ஆகிய அனைத்தும் பயனீட்டாளர்கள் விரும்பும் தேடல் வசதிகளை பிராந்திய மொழிகளில் செயலிகளின் மூலமாகவும், இணைய பக்கத்தின் மூலமாகவும் சேவைகளை வழங்கி விரைவாக தங்களுடைய நிறுவனத்தை சந்தைப்படுத்தி வருகிறது.

பிராந்திய மொழி உள்ளடக்கம்

அதற்கு உதாரணமாக, 2018 ஆம் ஆண்டில் பிரபலமான ஷேர் சேட் அப்ளிகேஷன், ட்ரெண்டிங் ஆன செய்திகளைபதிவேற்றியதின் மூலம் இந்தியர்களின் மத்தியில் பிரபலமடைந்தது. பல காலமாக, மக்கள் தங்கள் கருத்துகளை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில், சமூக ஊடகத்தின் உதவியினால், மக்கள் பல தகவல்களை பெற்றும், பகிர்ந்தும் வருகின்றனர். அதிலும், மக்கள் தங்கள் கருத்துக்களை தங்கள்  நண்பர்களிடம் பகிர்வதில் சோர்ந்து போவதில்லை. பகிரப்படும் செய்திகள் உண்மைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டியே, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பயனாளர்கள் விருப்பத்திற்கு இணங்க செய்திகளை புரிந்து கொள்ளும் விதமாக அவரவர் மொழிகளிலே உடனுக்குடன் வழங்கி வருகின்றனர். 

ஏன் இந்தியா ?

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22. ஆனால் இந்த 22 மொழிகள் முழுவதும் சேர்க்கப்படவில்லை. புதிய பிராந்திய மொழிகள் இணைப்பதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதன் வளர்ச்சி புதிய அத்தியாயத்தை தொடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தற்பொழுது இணைய  பயன்பாட்டில் உள்ள இந்திய பிராந்திய மொழிகள் : ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ், கன்னடம், தெலுங்கு.

பயன்பாட்டில் உள்ள மொழிகள் பேசும் மக்கள் தகவல் தொழில் நுட்பத்தில், அதிக பங்கு வகிக்கின்றனர். இவர்களிடம் மட்டும் ஒரு நிறுவனம் சுலபமாக சந்தைப்படுத்த முடியும். பிராந்திய மொழி வசதி வரும் வரை தேவைக்கு  ஏற்ற பங்களிப்பு குறைவாகவே இருந்தது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பயனீட்டாளர் தேவையை அறிந்து கொள்ளவும், சேவையை தடையின்றி வழங்கவும்  மற்றும் நுகர்வோரின் நம்பிக்கை பெறவும் பிராந்திய மொழி கையாடல் மிகுந்த பயன் அளிப்பதாக தொலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

பிராந்திய மொழி உள்ளடக்கம்

எப்பொழுதும் அவரவர் மொழியில் சேவையை வழங்கினால்தான் நிறுவனத்தின் குறிக்கோளும், பயனாளர்கள் திருப்தியும் அடைவார்கள். மொழி வேற்றுமை மிகுந்த இந்தியாவில் பிராந்திய மொழி உள்ளடக்க சேவையை வழங்குவது சற்று சவாலாக இருந்த போதிலும், இதற்கான எதிர்காலத்தையும், வளர்ச்சியையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தாள் முதல் தளம் வரை :

செய்தி தாள்கள் வாங்கி படிக்கும் பழக்கம் விவேகமான இணைய உலகத்தில் சற்று குறைந்து விட்டது என்றாலும், செய்தியை உடனுக்குடன் அறிய வேண்டும் என்ற ஆவல் வாசகர்களிடையே பிராந்திய மொழி உள்ளடக்கத்தின்  மூலம் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. உள்ளூர் செய்தி முதல் உலக செய்தி வரை தெரிந்து கொள்ள கூடிய ஆர்வம் சிறியோர் முதல் பெரியோர் வரை பரவி உள்ளது.

உலக இணையதள புள்ளியல் படி,  உலகில் அதிக இணையதள பயனாளர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனாவை அடுத்து இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. 90 சதவீத இந்தியர்கள் உரையாடல்களுக்காகவும் மற்றும் டிஜிட்டல் வழி பொழுதுப்போக்கு அம்சங்களுக்காகவும் இணையதளத்தை உபயோகிக்கின்றனர்.

 2021 ஆம் ஆண்டிற்குள் பிராந்திய மொழியின் வளர்ச்சியின் கணிப்பு:  

  • மொத்த வருடாந்திர வளர்ச்சி விகிதத்தின் படி, இந்திய பிராந்திய மொழி இணைய பயன்பாடு 2011 முதல் 2016 வரை 41 சதவீதம் உயர்ந்து 2016 ஆம் ஆண்டு முடிவில் 234 மில்லியன் பயனாளர்களை எட்டியுள்ளது.  இந்த தீவிரமான வளர்ச்சி ஆங்கில மொழி பயனாளர்களை விட உச்சத்தில் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இதன் வளர்ச்சி 2021 ஆம் ஆண்டின் முடிவில் 18 சதவீதம் உயர்ந்து 536 மில்லியன் பயனாளர்களை எட்டும் எனவும் கணிக்கப்படுகிறது.
  • பிராந்திய மொழி உள்ளடக்க தாக்கத்தால்,  ஆங்கில மொழி பயனாளர்கள் எண்ணிக்கை 3 சதவிகிதமாக  இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த கணக்கெடுப்பின் படி, 2021 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் பிராந்திய மொழி இணைய பயனாளர்கள் எண்ணிக்கை 75 சதவீதமாக அதிகரிக்க கூடும் என தெரியவந்துள்ளது.

இந்திய மொழி உள்ளடக்க சமூக வலைதள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 

  • ட்ரெண்டிங் உள்ளடக்கத்தை பகிர உதவும், ஷேர் சேட்
  • செய்திகளை வழங்கும், டெய்லி ஹண்ட் மற்றும் யுசி செய்திகள்
  • வீடியோ உள்ளடக்க பொழுதுப்போக்கு செயலியான, டிக் டாக்
பிராந்திய மொழி உள்ளடக்கம்

குறிப்பிட்ட அனைத்து தளங்களும் இந்திய மொழி உள்ளடக்கத்தால் இரண்டு மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது.

முதலீட்டார் வருகை :

இந்தியாவில் தொடங்கும் பிராந்திய மொழி உள்ளடக்கத்திற்க்காக தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். உள் நாட்டில் இருந்தும், வெளி நாட்டில் இருந்தும் முதலீட்டை பெரும் வாய்ப்புகள் இத்தகைய நிறுவனங்கள் பெற்று வருகின்றனர். குறிப்பாக சீனாவில் இயங்கும் முன்னணி நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியை ஒதுக்குவதில் தயாராக உள்ளது.

வாடிக்கையாளர் பயன் :

இந்தியாவில் தொடங்கப்படும் அனைத்து சந்தைகளும் தங்களுடைய வாடிக்கையாளர்கள் தக்க வைத்து கொள்ள போராடி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி விபரங்கள் பிராந்திய மொழியில் சந்தைப்படுத்துவதன் மூலம் இவ்விரு தரப்பினருக்கும் இடையே சரியான புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.

44 %  நுகர்வோர்கள் ஆங்கில மொழியில் சந்தை தகவல்களை அறிவதில் சிரமம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதிலும், பயனாளர்கள் பதிவு செய்யும் விமர்சனங்களும் அவரவர் தாய் மொழியில் பதிவிடுவதால் நிறுவனத்தின் நிறை, குறைகளையும் பயனாளர்களின் தேவையை உடனடி தீர்க்க முடியாமல் போகவும் நேர்ந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இணையதள வர்த்தகத்தில் ஹிந்தி மொழியை விட, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் வழியாக வழங்கப்படும் விற்பனை பொருட்கள் 75 % அதிகரித்துக் காணப்படுகிறது.

இணைய வசதி :

இணையம் இன்றி அமையாது உலகு என்பவைக்கு ஏற்ப, நம் அன்றாட வாழ்வில் தேவைப்படும் அனைத்தும் இணையத்தில் அடங்கி விட்டது. முன்பெல்லாம் இணையத்தை தேடி சென்று வேலைகளை செய்து வந்தோம்; தற்பொழுது இணையதளமே நம்மைத் தேடி வந்து வாய்ப்புகளையும், தேவைகளையும் அளித்து வருகிறது. பல ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள்  உதவியுடன், இன்று நமக்கு மலிவான இணைய வசதி கிடைத்து வருகிறது. காலப்போக்கில், டேட்டா  விலை இருக்கும் விலையைவிட குறைவாகவோ அல்லது இலவசமாகவோ கிடைத்தால் ஆச்சரியப்பட இல்லை. மலிவான இணைய வசதியால் இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் வர்த்தகம் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வர்த்தகம் வெறும் உயர் வர்கத்தினருக்கோ  அல்லது ஆங்கில மொழி பேசும் நபர்களுக்கோ மட்டும் சென்று நின்று விடக்கூடாது என்பதால் அனைத்து தரப்பின மக்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அவர்கள் மொழியில் அறிவை புகட்டி, அவர்களையும் இந்திய வர்த்தகத்தில் ஒருவராக இணைத்துக் கொண்டு வருகிறது.

வேலை வாய்ப்பு :

புதியதாக தன் இலக்கை அடைய தொடங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சி அதிகரித்த வண்ணமே உள்ளதால் அவர்களின் தேவையும் மற்றும் அவர்கள் குறிக்கோளை அடைய உதவும் நபர்களை பணிக்கு அமர்த்த முனைப்பாக இருந்து வருகிறது. பிராந்திய மொழியில் வல்லுனர்கள், மொழிப்பெயர்ப்பாளர்கள், உள்ளடக்க எழுத்தாளர்கள், சந்தைப்படுத்துபவர், எடிட்டிங் மற்றும் உள்ளடக்க டெவலப்பர் போன்ற பல திறமை வாய்ந்தவர்களுக்கு இத்துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. மேலும், வேலை வாய்ப்பு தகவல்களை பிராந்திய மொழியில் வழங்குவதில் மின்ட்லி போன்ற நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.             

 இந்தியாவில் பிராந்திய மொழி உள்ளடக்கங்களை விரும்பும் மொபைல்  பயனாளர்கள் பெருமளவில் வளர்ந்து வருகின்றனர்.” - மகேஷ் கோகைனேனி, GIFSKEY

                

 

 

 

 

Language