வாழ்க்கையில் ஒரு மனிதன் தேர்ந்தெடுக்கும் சரியான முடிவு தான் அவனுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. அதிலும், உயர்க்கல்வியை தொடர விரும்பும் போது எடுக்கும் தீர்மானங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்கும் குமாரப்பருவம் குழப்பம் நிறைந்த பருவமாக இருப்பதால், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

வழிகாட்டுதலின் அவசியம்:

மாணவர்களிடம் இந்த சமுதாயம் பல கேள்விகளை முன் வைக்கிறது. நீ பெரியவனாகும் போது என்னவாக இருக்க விரும்புகிறாய்? அதற்கு பதில் மருத்துவர், பொறியாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆக விருப்பம் என கூறுவார்கள். உண்மையில் அதை தாண்டி வேறு என்ன பதவிகள் உள்ளது என்ற விழிப்புணர்வு இன்றி இருக்கிறார்கள். இதுவே பெண்களிடம் கேட்டால், ஆசிரியராக விருப்பம் என்பார்கள்; விரும்புவது தவறல்ல; ஆனால் சொல்லப்படும் துறைகளை‌த் தாண்டி மாணவர்கள் யோசிப்பதில்லை.

பெற்றோர்களும் உயர் வேலை வாய்ப்புகளை வழங்கும் கல்வி குறித்தான ஆலோசனை பெறுவது அவசியம். இல்லையெனில், தங்களுடைய பிள்ளைகள் தேர்வு செய்யும் புதிய உயர் கல்வி மீதான சந்தேகங்கள், மாணாக்கர்களுடைய கனவுகளை சிதைத்து விடும்.

இந்தியா அரசாங்க சட்டங்கள் எதிர்பாராத நேரத்தில் அமலுக்கு வரும் நிலையில், நாட்டின் வளர்ச்சியில் அதிக  பங்குபெறக் கூடிய தொழில் துறை அதிக தாக்கத்தை சந்திக்கிறது. ஒருவேளை பாதகமாக இருந்தால் முதலில் பாதிப்படைப்பவர்கள் பணியாளர்களாக தான் இருப்பார்கள்.  

 Reuters தகவலின் படி, 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், 5 மில்லியன் இந்தியர்கள் தங்களுடைய வேலைகளை இழந்துள்ளார்கள்.

இதற்கு காரணம், அரசாங்கத்தால் அமலுக்கு வந்த பணமதிப்பிழப்பு கொள்கை.

வேலையை இழப்பது என்பது உழைப்பு, நேரம் மற்றும் பணம் ஆகியவற்றையும் கூட இழப்பதற்கு சமம். இந்த வேலை இல்லையென்றால் வேறு வேலையை பெற்று விடலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும், அநேகருக்கு நினைக்கும் வேலையும், அதே வருமானமும் கிடைப்பதில்லை. இது போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலையை சமாளிப்பது எப்படி என்று பல்வேறு வேலை வாய்ப்பு தளங்கள் பல்வேறு துறையில் உள்ளவர்களுக்கு வழிகாட்டுகிறது.

வாழ்க்கை வழிகாட்டி

எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? என்ற கேள்விக்கு போவதற்கு முன்பு, தொலைதூர பார்வையோடு உயர்கல்வியை பற்றி நன்கு அறிய வேண்டும். எந்தவொரு உயர் கல்வியை தொடரும் போதும் வேலை வாய்ப்புகளை அளிப்பதை விட, வேலை வாய்ப்புகளை உருவாக்க கூடிய படிப்புகள் எது என ஆராய்ந்து பார்க்க வேண்டும். காலம் முழுவதும் ஒரு நிறுவனத்தின் கீழ் எவ்வளவு நாள் ஊழியராக பணியாற்ற முடியும்? அதிலும், அரசாங்கம் அல்லாத நிறுவனங்கள் நிலையான நிர்வாகத்தை கொண்டுள்ளதா என்று எப்படி யூகிக்க முடியும்? இப்படி நிரந்தரமற்ற சூழ்நிலையைத் தவிர்க்க, தன்னுடைய திறமைகளை வளர்க்கக் கூடிய துறை எது? எந்த துறை தன்னை தொழில்முனைவராக, நிபுணராக வளர்க்க உதவும் என்ற ஆலோசனையை இலவசமாக நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பெற பல தளங்கள் தன்னார்வ தொண்டோடு செயல்பட்டு வருகிறது.

வாழ்க்கை வழிகாட்டி

வாழ்க்கை வழிகாட்டு முகாம் :

இந்தியா முழுவதும் வாழ்க்கை வழிகாட்டு முகாம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைப்பெற்று கொண்டுதான் வருகின்றன. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கையை விட தற்பொழுது நடத்தப்படும் முகாம்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல துறையில் பதவி வகிப்பதாலும், தொழில்நுட்பத்தில் பல்வேறு துறைகள் இணைவதாலும் வேலை வாய்ப்புகள் பல துறைகளில் காத்திருக்கின்றன. முன்பெல்லாம், ஒரு சிலர், அவர்களுக்கு தெரிந்த நபர்கள் எந்த துறையில் சேர்கிறார்களோ அந்த துறையை கண்மூடித்தனமாக தேர்வு செய்வார்கள். அதிலும், பெற்றோர்களின் நிர்பந்தம் சரியான துறையை தேர்வு செய்ய கடினப்படுத்தும். இதனால், பல மாணவர்கள் தனக்கு விருப்பமில்லாத படிப்பை பாதியிலே விட்டு செல்வதோடு, அந்த படிப்பில் தோல்வியையும் சந்திக்க நேரிடுகிறது.

நிர்பந்தப்படுத்தும் எந்த வேலையையும் முழுமையாக செய்து முடிக்க இயலாது. பல தோல்வி பயங்களை தவிர்க்கவே இன்று அரசாங்கம் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டு முகாம் மூலம் ஆலோசனையை வழங்கி வருகிறது. பள்ளியில் இருக்கும்போதே உயர்கல்வியின் முக்கியத்துவத்தை அறிவதன் மூலம் தனது இலக்கு எது என்று மாணவர்களால் உணர்ந்துக் கொள்ள இதுபோன்ற முகாம்கள் உதவியாக இருக்கின்றன.

போட்டி தேர்வுகள் :

படித்து முடித்தவுடன், உயர் கல்வியை தேர்ந்தெடுப்பதா அல்லது போட்டி தேர்வை எதிர்கொள்வதா என்ற கேள்வி அநேகருக்கு இருக்கும். உயர் கல்வியை தொடருவது எளிதான காரியமாக இருந்தாலும், போட்டி தேர்வுகள் நம்முடைய திறனை அதிகப்படுத்துவதோடு, வேலை வாய்ப்பையும் பெற்று கொடுக்கும். படித்து முடித்தபிறகு போட்டி தேர்வு எழுதுவது மிகவும் சுலபமாக இருக்கும். அதுவே நீங்கள் பல வருடங்கள் கழித்து போட்டி தேர்வில் கவனம் செலுத்த முன்வந்தால் புதியதாக பல பாடங்களை நினைவுக்கூறுவது சற்று கடினமானதாக இருக்கும். போட்டி தேர்வுகள் வருகிறதோ இல்லையோ! பள்ளி பருவம் முடிந்தவுடன் உங்கள் கற்றலை தொடரும் போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்.     

தேர்வு விவரம் :

ஆசிரியர் தகுதி தேர்வு, வங்கி தேர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், இந்திய அளவிலான ஆட்சியல் தேர்வுகள் மற்றும் பிற போட்டி தேர்வுகளுக்கான கல்வி தகுதியை அடைந்தவுடன் பங்குபெறுவது சிறந்த தொடக்கமாக இருக்கும். இங்கு குறிப்பிட்ட அல்லது விடுபட்ட பல போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள சரியான பயிற்சி மேற்கொள்வது அவசியம்.  

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தகவல்களை அளிக்கும் நாளிதழ்கள்:

செய்தித்தாள்கள் பல ஆண்டு காலமாகவே கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தகவல்களை அளித்து வருகிறது. மேலும், போட்டித் தேர்வுக்கான வினா விடைகள் அடங்கிய பக்கங்களும் வெளியிடுகின்றன. தினமலரின் கல்விமலர், தினத்தந்தி, தினமணி போன்ற நாளிதழ்கள் தங்கள் இணைய பக்கங்களிலும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்கி வருகிறது. செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கமுள்ளவர்கள் தினந்தோறும் தகவல்களைப் பெற முடியும்.

வார மற்றும் மாத இதழ்கள் :

மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக ஒரு சில வார மற்றும் மாத இதழ்களான  புதிய தலைமுறை கல்வி மற்றும் கல்வி வேலை வழிகாட்டி இதழ்கள் வெளிவந்துள்ளன. அதில் எந்த வேலைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்றும் சுய தொழில் விவரங்கள் மற்றும் கல்வி கடன்கள் அடங்கிய முழு தகவல்களுடன் வழிகாட்டி வருகிறது.

தொலைக் காட்சி நிறுவனங்கள்:

மக்களால் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சி நிறுவனங்களில், கல்வி மற்றும் தொழில் தொடர்பான செய்திகளை நிபுணர்களை கொண்டு வழங்கி வருகிறது. மேலும், உயர் வேலை வாய்ப்புகள் எந்தெந்த அயல்நாடுகள் இந்திய மாணவர்களுக்கு அளிக்கிறது; கல்வி கடன் பெறுவது எப்படி போன்றவற்றை நேரலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறது.

வேலை வாய்ப்பு தகவலுடன் வழிகாட்டும் சிறந்த வலைத்தளம் :

இணையத்தில் அதிக நேரத்தை செலவிடும் இளைஞர்களுக்கு வசதியாக பல்வேறு வழிகாட்டுதல் தளங்கள் வந்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக, உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசனை மற்றும் தகவல்களை அளிக்கும் ட்ரெண்டிங் ஆன வேலை வாய்ப்பு வலைத்தளமான மின்ட்லி போன்ற நிறுவனங்கள் பல்வேறு மொழிகளில் சேவையை வழங்கி வருகிறது. நேர்காணல் எவ்வாறு மேற்கொள்வது? தொழில் மேலாண்மை மற்றும் வேலை வாழ்க்கை சமநிலையில் தன்னை எவ்வாறு தயார்ப்படுத்திக்கொள்வது போன்றவை இணைய நேரலை அமர்வு மூலம் வழிகாட்டுகிறது.

​    ​வாழ்க்கை வழிகாட்டி

ஆங்கிலத்தில் மட்டுமே பல்வேறு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் விவரங்கள் வந்த நிலையில் இது போன்ற வலைத்தளங்களால் அவரவர் மொழிகளில் கற்று பயனடைய ஏதுவாக அமைகிறது.

 

Language