இந்தியாவில் வேலையின்மை நெருக்கடி பல ஆண்டு காலமாக இருந்து வந்தாலும் தற்பொழுது அதைப் பற்றி தீவிரமாக பேச பல காரணங்கள் உண்டு. அதிலும், வேலை வாய்ப்பை அதிகமாக உருவாக்கி கொடுக்கும் முக்கிய மாநிலமான தமிழ்நாட்டில் வேலையின்மை நெருக்கடி அதிகமாக கவனிக்கப்பட வேண்டியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தியா வளர்ந்து வரும் நாடு என்ற பட்டியலில் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வேலையின்மை

 

உற்பத்தி துறையில் அதிக அந்நிய முதலீட்டை பெற்று தரும் நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்பொழுது சற்று வெகுவாக சரிய என்ன காரணம்? அரசாங்கத்தில் ஏற்படும் மாற்றத்தால் படித்த பட்டதாரிகள் எவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்? வேலையின்மை நெருக்கடியில் இருந்து எவ்வாறு இன்றைய இளைய சமுதாயம் தப்பித்துக் கொள்ள முடியும் போன்ற பல கேள்விகளுக்கான பதிலை இந்த கட்டுரை விவரிக்கிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சி :

தமிழ்நாடானது ஜவுளி, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், வேதிப் பொருட்கள், கனரக வாகன உதிரி பாகம் தயாரித்தல், ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள் போன்ற பல்வேறு உற்பத்தி துறைகளில் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதி துறையிலும், தொழில் நுட்ப துறையிலும் பிற மாநிலத்திற்கு முன் உதாரணமாக திகழ்கிறது.

 • மின்னணு வன்பொருள் உற்பத்தியில் தமிழ்நாடு 3 ஆவது இடத்தில் உள்ளது.
 • தமிழகத்தில் சுமார் 2,500 இரசாயன மற்றும் பெட்ரோல் வேதியியல் தொழிற்சாலைகளான பல்வேறு உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இது சுமார் 1,20,000 மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தந்தது.
 • உலகின் மிகப்பெரிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது.

நியூஸ்18  வலைதளத்தில் உள்ள அறிக்கையின் படி, தமிழ் நாட்டில் ஐ.டி மற்றும் ஐ.டி சேவை துறைகளான அசேன்ஜர், இன்போசிஸ், காக்னிசண்ட், போன்ற பல நிறுவனங்கள் மூலமாக 2017-2018 ஆம் நிதியாண்டில் 6.15 பில்லியன் அமெரிக்க டாலர்களை தமிழ்நாட்டிற்குள் முதலீடாக பெற்றுள்ளது என்றும் மென் பொருள் ஏற்றுமதியில் 17.1 பில்லியன் டாலர் வரை வணிகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

ஏன் தமிழ்நாடு வேலையின்மை நெருக்கடியை சந்திக்கிறது?

வந்தாரை வாழ வைக்கும் நாடு என தமிழ்நாட்டைப் பற்றி சொல்லாதவர்கள் எவருமில்லை எனலாம். ஆனால் தற்பொழுதோ இங்கு இருப்பவர்களுக்கு வாழ்வதே சவாலாக இருக்கிறது. கல்வியறிவு மிக்க மாநிலமான தமிழகத்தில், படித்த இளைஞர்கள் வேலையின்றி நெருக்கப்படுவது, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கேள்விக் குறியாக்குகிறது.

தமிழ்நாட்டின் உற்பத்தி மற்றும் வேளாண்மை துறையில் உள்ள வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தை அதிகரித்துள்ளது. ஆனால் இதுபோன்ற பல வேலைகளால் பல வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில்,  அரசாங்க சட்டமான பண மதிப்பிழப்பு கொள்கையால், ஒட்டு மொத்த துறையும் ஸ்தம்பித்துவிட்டது என்றுதான் சொல்ல முடியும். அதன் தாக்கம் சற்றும் குறையவில்லை. இதனால் தமிழ்நாடு மட்டும் பாதிக்கப்படவில்லை, ஒட்டு மொத்த இந்தியாவும் மிகப்பெரிய சிரமத்தையும், நஷ்டத்தையும் கண்டது.

வேலையின்மைக்கு பண மதிப்பிழப்பு மட்டும் காரணம் என்று சொல்லி விட முடியாது. இந்திய அரசாங்கம் அடுத்தடுத்து கொண்டு வந்த சரக்கு சேவை வரியால், சிறு குறு நிறுவனங்கள் நிதி பற்றாக்குறையால் மூடப்பட்டதும் இன்று பல்வேறு துறைகளில் இணைந்திருந்தவர்கள் வேலையை இழந்துள்ளார்கள். வெளிவந்த அறிக்கையின் படி, 50,000 சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டதாக தெரிய வந்துள்ளது.  

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மத்திய அமைச்சகத்தின் தொழிலாளர் பிரிவின் கணக்கெடுப்பின்படி, 2015-16 ஆண்டு காலங்களில் தமிழ்நாட்டில் கல்வியறிவுள்ளவர்கள் வேலையின்மை விகிதம் 6.2% ஆக இருந்தது. இது கர்நாடகா மற்றும் குஜராத் (1%), மகாராஷ்டிரா (2.1%), மேற்கு வங்கம் (5.8%) மற்றும் ஆந்திரா (5.2%) போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் விகிதம் அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டின் வேலையின்மை நெருக்கடி 2015 ஆம் ஆண்டில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ச்சியாக வந்த புயல், பண மதிப்பிழப்புக் கொள்கை, சரக்கு சேவை வரி மற்றும் அரசியல் குழப்பம். இவை அனைத்தும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் நிகழ்ந்த அரசியல் குழப்பத்தால், அந்நிய முதலீட்டாளர்கள் வருகை நின்றுவிட்டது. பல திட்டங்கள் கையொப்பம் இடுவதில் தாமதம் ஏற்பட்டது. முதலீடு செய்ய வரும் தொழில்முனைவோர்கள், தமிழ்நாட்டின் நிலையற்ற தன்மையினால், அண்டை மாநிலத்தில் அவர்கள் முதலீடு செய்ய தங்கள் முகத்தை திருப்பி விட்டார்கள். இது போன்ற கடினமான சூழ்நிலையை தொடர்ச்சியாக தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் சந்தித்து வருகிறார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்படுவோர்கள் இளைஞர்களே!


வேலையின்மையால் இளைஞர்கள் படும் அவதி!

ஒரு தனிநபர் வேலைக்கு ஏற்ற திறமைகளையும், தகுதியையும் பெற்றிருந்தும், வேலை கிடைக்காத அல்லது வேலை இல்லாத நிலையை தான் வேலையின்மை என்று கூறுகிறோம்.

கனவு வேலைக்காக பல இலட்சங்களை செலவு செய்து உயர் கல்வியையும், முதுகலைப் பட்டமும் பெற்றிருந்தாலும், படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்ற பட்டதாரிகளைவிட, பொறியியல் கல்லூரிகளில் வெளிவந்த பட்டதாரிகள் பற்றி அதிக அக்கறை செலுத்துவது ஏன் என்று பார்த்தால், இவர்கள் துறையில் வேலையில்லாததால், இலட்சக்கணக்கானோர் குறைந்த வருமானம் தரும் வேலைகளில் முழு நேர வேலையையும் மற்றும் கூடுதல் வருமானம் தரும் வேலையையும் நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வேலையின்மை

 

ஒவ்வொரு தெரு முனைகளில் உள்ள உணவு விடுதியில், தங்களுடைய நண்பர்களோடு சென்று பொழுதை கழிக்க இருந்த காலம் மாறி, தன் குடும்பத்தின் எதிர்காலம் நன்றாக இருந்தால் போதும் என்று எண்ணி, உணவு விநியோகிக்கும் நபராக வரிசையில் நின்று தங்களுடைய வாடிக்கையாளர்களை நோக்கி அவர்கள் பயணித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வரும் படித்த பட்டதாரிகள். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உபர் ஈட்ஸ், ஸ்விக்கி, ஜோமேட்டோ போன்ற நிறுவனங்களில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாக வேலை செய்கிறார்கள். படிப்பிற்கு ஏற்ற வேலையில்லாததால், மற்ற வேலையில் தங்களை இணைத்துக் கொண்டாலும், கனவு வேலைக்கான தேடுதல் இருந்துக் கொண்டேதான் இருக்கிறது.

துப்பரவு பணிக்கு 4600 க்கும் அதிகமானோர் குறிப்பாக பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த துப்புரவு பணிக்கான காலியிடம் வெறும் 14 தான்.

வேலைக்கான காலியிடங்கள் ஏதேனும் இருந்தால், அதில் கல்வி தகுதி குறைந்தது 10 ஆம் வகுப்பும், 12 ஆம் வகுப்பும் இருந்தால் போதும் அதை தவிர எங்களுக்கு பட்டதாரிகள் வேண்டாம் என ஒரு சில நிறுவனங்கள் சொல்கிறது. மேலும், பட்டதாரிகள் இருந்தால் போதும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் எங்கள் நிறுவனத்தை அணுக வேண்டாம் என பிற நிறுவனங்கள் அறிக்கை வெளியிடுகிறது. இந்த இரண்டையும் தாண்டி ஒருவர் வேலைக்கு சென்றால் தொழில்நுட்ப திறன் உண்டா, மென்பொருள் மொழியை அறிந்திருக்கிறீர்களா? ஆங்கிலத்தில் புலமையாக பேசக் கூடியவரா? உங்கள் அனுபவம் என்ன? உங்களுக்கு தற்பொழுது என்ன வயது? போன்ற பல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு விட்டு, அதற்கான பதிலை பெற்றுக் கொண்டும் வேலை தர மறுக்கிறார்கள். இது போன்ற கடினமான கேள்விகளில், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் சோர்ந்து போனவர்கள் ஒரு சில நேரங்களில் திறமை இருந்தும் சரியாக பதலளிக்க முடியாமல் திரும்பிவந்து, சுலபமான வேலை ஏதேனும் உண்டா என்று பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதுதான் இன்றைய இளைஞர்களின் அவலநிலையாக உள்ளது.


வேலையின்மை நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது?

வேலையின்மை

 

 • வேலையின்மை நெருக்கடி என்பது தனிநபரின் பிரச்சினை அல்ல; அது அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியை பிரதிபலிக்கிறது என்பதை உணர வேண்டும்.

 • வேலையின்மையால் சோர்ந்து விடாமல், தொடர்ந்து முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

 • அதிக நேரம் தூங்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும்.

 • உடற் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, தாழ்வு மனப்பான்மையை நீக்கிவிடும்.

 • பகுதி நேர வேலை வாய்ப்புகள் கிடைத்தால் அதனை உடனே பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதனால் உங்களுடைய பணி அனுபவத்தில் இடைவெளி ஏற்படாமல் இருக்கும்.

 • புதிய வேலை வாய்ப்புகள் வந்தால் பயன்படுத்தி கொண்டு திறமைகளை வளர்த்துக் கொள்வது புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

 • ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேலைகளுக்கு விண்ணப்பித்து காத்திருங்கள். வேலையின்மையால் அநேகர் ஒரே நேரத்தில் பல வேளைகளில் விண்ணப்பித்து எந்த அழைப்பை ஏற்பது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறவர்களும் உண்டு.

 • மின்ட்லி தளத்தில் உங்கள் கணக்கை பதிவு செய்து கொள்வதன் மூலம் உங்கள் தொலைப்பேசிக்கோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றிட முடியும்.

இந்தியாவில் 2017-18 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், வேலையின்மை 6.1 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) தெரிவித்துள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை பிரச்சனை தலைத்தூக்கியுள்ளது.

Language