தென்னிந்தியாவில் வட இந்தியார்களுக்கான வேலை வாய்ப்புகள் | Mintly

world

13 Jobs for North East Indian Jobseekers in South India

 

          வேலையின் காரணமாக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது இயல்பான விஷயம். இதில் பெரும்பாலும் தனது சொந்த ஊரில் வைத்த நேர்காணலில் தேர்வாகி பின்னர் குறிப்பிடப்பட்ட பணிக்காக வெளியூர் செல்பவர்கள் அதிகம். ஆனால் தனது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்பவர்களும் உண்டு. இந்த வகையில் வட இந்தியாவில் இருக்கும் இந்தியர்கள் எவ்விதமான வேலைகளை தென்னிந்தியாவில் இருந்து பெறலாம் என்பது குறித்து தற்போது பார்க்கப்போகிறோம்.

 

சமையல் தொழிலாளர்கள்

தென்னிந்திய மக்களை எளிதில் கவரக்கூடிய விஷயங்களில் உணவு பதார்த்தங்கள் முக்கியமானது. வெவ்வேறு விதமான உணவுகளை ரசித்து சாப்பிடுவதில் அவர்களுக்கு இருக்கும் இன்பம் அலாதியானது. தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் வருமானத்தில் பெரும்பகுதியினை தனக்குப் பிடித்த உணவுகளை பிடித்தமாதிரி உண்பதில் செலவிடுகின்றனர். இதைப் புரிந்துகொண்ட பல ஹோட்டல் உரிமையாளர்கள் செட்டிநாடு, சைனீஸ், போன்ற உணவுகளுடன் பல்வேறு விதமான வட இந்திய உணவுகளை வித்தியாசமான பாணியில் விளம்பரப்படுத்துகின்றனர்.

இவ்வாறு அமைந்துள்ள ஹோட்டல்களில் வட இந்திய சமையல் தொழிலாளிகள் பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்களின் பூர்வீகம் வட இந்தியாவாக இருந்தாலே போதுமானது, ஏனெனில் அவர்களின் கைப்பக்குவம் அதற்கேற்றார்போல் இயற்கையாகவே அமைந்திருக்கும். இவர்களுக்கு மூன்று வேலை உணவுடன், தங்குவதற்கு இடத்தினையும் கொடுத்து அதன்பின்னர் சம்பளத் தொகையில் நல்ல மதிப்புடன் ஒப்பந்தம் செய்கின்றனர். அதற்கேற்றாற்போல் அவர்களால் ஹோட்டலுக்கு வருமானமும் அதிகமாகக் கிடைக்கிறது.

 

வாகன ஓட்டிகள்

நெடுந்தூர பயணங்கள் மற்றும் இந்தியா முழுவதுமான சுற்றுலா போன்றவற்றிற்கு ஆங்கிலத்துடன், ஹிந்தியும் தெரிந்திருக்கும் டிரைவர்கள் தேவைப்படுகிறார்கள். சுற்றுலா ஏஜென்சிகள் இவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதன் மூலம் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்கள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள்.

தங்களுக்குத் தெரிந்த மொழி மற்றும் தெரிந்த இடங்கள் என்பதால் டிரைவர்களுக்கு இது எளிதான மற்றும் நன்கு பழகிய வேலையாகவும் அமையும். இதற்கான தகுதிகளில் ஏற்கனவே பல்வேறு பகுதிகளுக்கு சுற்றியவர்களாகவும், வாகனங்களை ஓட்டத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளுக்கு டிரைவர்களாக செல்வது ஒருபுறம் இருந்தாலும், பொருட்களைக் கொண்டு செல்லும் லாரி டிரைவராக வட இந்தியர்களைப் பணியமர்த்த சில வாகன உரிமையாளர்கள் விரும்புகின்றனர். தென்னிந்தியாவில் இருந்து வட இந்தியாவிற்கு பல்வேறு வகையான காய்கறிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, அதேநேரத்தில் வட இந்தியாவில் செழிப்பாக வளரும் காய்கறிகள் மற்றும் தானியங்கள் இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. வட இந்தியர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலும், தென்னிந்தியாவிலும் நன்கு தெரிந்த நண்பர்களைக் கொண்டிருந்தால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பெரும்பான்மையாக சம்பாதிப்பதுடன், அதற்கேற்றாற்போல் சில்லரை வணிக கடைகளையும் திறந்து சம்பாதிக்கலாம்.

 

கட்டிடத் தொழிலாளிகள்

இவர்களை பல்வேறு இடங்களில் தென்னிந்திய மக்கள் ஏற்கனவே பார்த்திருப்பார்கள். ஏனெனில் குடும்பத்துடன் வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியா வந்து மொத்தமாக வேலை செய்வதில் இவர்கள் பெயர்பெற்றவர்கள். குடும்பத்துடன் இடம்பெயர்வதால் அதிகப்படியான செலவுகள் இவர்களுக்கு ஏற்படுவதில்லை. அத்துடன் மொத்தக் குடும்பமும் வேலையில் இறங்குவதால் அதிகப்படியான வேலைகள் விரைவாக முடிக்கப்படுகின்றன, அதேபோல் அதிகப்படியான ஆட்கள் வேலை செய்வதால் தனிக்குடும்பத்திற்கான வருமானமும் இவர்களைப் பொறுத்தவரையில் அதிகமாகும். தென்னிந்திய மக்களுடன் ஒப்பிடும்போது இவர்களின் உழைப்பு கட்டிட வேலைகளில் மிக அதிகம், அதே நேரத்தில் தென்னிந்தியர்களுடன் ஒப்பிடும்போது சம்பளமும் குறைவு என்பதால் பல கட்டிட முதலாளிகள் வட இந்தியர்களை தேர்வு செய்வதில் தயக்கம் காட்டுவதில்லை.

இவர்களுக்காக தனியாக தங்குமிடங்களைக் கூட அந்த முதலாளிகள் கொடுப்பதில்லை. ஒப்பந்த அடிப்படையில் புரோக்கர்கள் மூலமாக கூட்டமாக வட இந்தியர்களை தென்னிந்தியாவிற்கு வரவழைத்து, பெரிய பெரிய கட்டிட வேலைகளுக்கு மாதக் கணக்கில் வேலை செய்ய வைக்கின்றனர். தங்கள் சொந்த இடத்தினைக் காட்டிலும் இங்கு உணவு மற்றும் சம்பளத்திற்கான ஆதாரங்கள் சிறப்பாக கிடைப்பதால் வட இந்தியர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்து உழைக்கின்றனர். பெரும்பாலும் இவர்களின் வேலைக்கேற்ற ஊதியம் இங்கு வழங்கப்படுவதில்லை என தென்னிந்திய மக்கள் கருதுகின்றனர்.

 

தகவல் தொழில்நுட்பம்

மேற்கூறிய அனைத்திற்கும் தகுதிகள் மிக குறைவாக இருந்தாலும், இப்போது கூறப்படும் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு படிப்பறிவு மிக அவசியம். உடல் உழைப்பைக் காட்டிலும் மூளையின் உழைப்பு அதிகமிருக்க வேண்டும். வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவின் சென்னை, பெங்களூரு, கேரளா போன்ற பகுதிகளில் உள்ள அதிகபட்ச ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியினால் படித்த வட இந்தியர்கள் தென்னிந்தியாவினை நாட வேண்டியுள்ளது.

இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமும் அதிகம், ஏனெனில் இவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு அவுட்சோர்ஸிங்க் புரோஜெக்ட்டுகளில் அமர்த்தப்படுகின்றனர். தங்களின் படிப்புக்கேற்ற வேலை, உயர்தர இருப்பிடம், உணவு மற்றும் பழக்கவழக்க மாற்றங்கள், அத்துடன் உடன் வேலை பார்க்கும் படித்த சமூகம் என பல்வேறு வகையான நன்மைகள் இவர்களுக்குக் கிடைப்பதால் ஐடி வேலைகளுக்கு தென்னிந்தியாவினை நோக்கி வட இந்தியர்கள் வருகின்றனர். இங்கு சிறப்பாக பணிபுரிவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகளும் வழங்கப்படுவதால் படித்த இளைஞர்கள் தயக்கமின்றி தென்னிந்தியாவினை நாடுகின்றனர்.

 

சில்லரை வணிகம்

சில்லரை வணிக கடைகளைப் பொறுத்தவரையில் இந்தியாவில் எவ்விதமான தொழிலும் விரைவாக மேம்படும். ஏனெனில் மக்கள் வித்தியாசமான பொருட்களையும் அன்றாட்த் தேவைகளுக்கு உரிய பொருட்களையும் வீட்டு பட்ஜெட்டில் அடங்கும் விலையில் வாங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றனர். வட இந்தியர்கள் தங்கள் சொந்த ஊர்ப்பகுதிகளில் பிரசித்தி பெற்ற உணவுகளாக அமைந்தவற்றை தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு கடைகளாக அமைத்து உருவாக்கி விற்கலாம். இதற்கான வரவேற்பு மிக அருமையாக இருக்கும், முதலீடும் மிகக் குறைவுதான்.

உணவு தவிர, அவர்களுக்கென்று சிறப்பாக உள்ள நொறுக்குத் தீவன வகைகள், அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் என வித்தியாசமான பொருட்களுக்கு எப்போதுமே தென்னிந்தியாவில் தனி வரவேற்பு உண்டு. இதற்கு எளிய உதாரணமாக பானி பூரி கடைகளைக் காட்டலாம். ஏனெனில் இதில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே வேலை செய்வர். மாலை நேரங்களில் மட்டுமே இயங்கும் இக்கடைகள் தென்னிந்திய சிற்றுண்டி கடைகளுக்கு நிகரான வகையில் இலாபம் ஈட்டும் வகையில் செயல்படுகிறது.

கட்டிட வேலைகள், மருத்துவத்துறை மற்றும் ஐடி ஆகிய மூன்று முக்கிய வேலைகளுக்காகவே வட இந்தியர்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவினை சார்ந்துள்ளனர். இவை தவிர இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம் என்ற ஒப்பந்தத்துடன் களமிறங்கும் படித்த இளைஞர்கள் வங்கி, காவல் துறை போன்ற பொதுவுடைமை ஆக்கப்பட்ட இந்திய துறைகளின் வழியே தென்னிந்தியாவில் அமையும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவற்றைத் தவிர பாதுகாப்பு அலுவலர்களாக பலம் பொருந்திய வட இந்தியர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

language: 
Tamil